Thursday, April 9, 2009

செல்லாத காசு...

வேலையில்லாத பட்டதாரி ஒருவர் ஒரு நாள் காலையில் எழுந்து தன் சட்டை பையில் கையை விட்டு தேடினார், அவருக்கு கிடைத்ததோ ஒரு கிழிந்த பாத்து ரூபாய் நோட்டு மட்டுமே. வேறு பணமும் இல்லை, வேலையும் கிடைக்கவில்லை, படித்தவன் என்பதால் யாரிடமும் யாசகம் கேட்கவும் மனம் இல்லை, என்ன செய்வது என்றும் புரியாத நிலையில். இந்த பைசாவிற்கு ஏதேனும் சாபிடலாம், பின்னர் மரணமே நமக்கு வழி என்று, தான் வைத்திருந்த பைசாவிற்கு உணவை வாங்கி அதை உண்ணுவதற்காக ஒரு பாலத்தின் அருகே வந்து அமர்ந்தான்.

அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு பெரியவரும் மூன்று சிறு பிள்ளைகளும் யாசகம் கேட்கும்படி அவன் அருகே வந்து; உண்ண ஏதும் உணவு இருந்தால் கொடுங்கள், நாங்கள் சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிறது என்று சொன்னார்கள்.

நமக்காவது ஒரு நாள் தான், இவர்கள் என்னை விட பாவம் என்று எண்ணி தன்னிடம் இருந்த உணவை அவர்களுக்கு கொடுத்துவிட்டான். அதை பெற்றுக்கொண்ட அந்த பெரியவர், அவன் கையில் ஒரு பழைய நாணயத்தை கொடுத்துவிட்டு சென்றார். அவன் அதை கண்டு, செல்லாத அந்த பைசா எதற்கு என தூக்கியெறிய முற்பட்டான், ஆனால் ஏதோ நினைவில் அதை தன் பையில் போட்டுகொண்டு அந்த பாலத்தின் அடியில் சென்று படுத்தான்.

அவன் படுத்த இடத்தில் ஒரு துண்டு காகிதத்தை கண்டன், அதில் ஒரு விளம்பரம் இருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய நாணயம் வாங்கப்படும் என்று இருந்ததை கண்டான் ஆனால் அங்கு செல்லலாமா வேண்டாமா என்ற பெரிய மனபோரட்டத்திற்கு பிறகு அவன் அந்த விலாசத்துக்கு சென்று அங்கே அந்த பெரியவர் கொடுத்த அந்த நாணயத்தை காட்டினான். அதை கண்டவுடன் அந்த நிறுவனத்தின் அதிகாரி "நாங்கள் எதிர் பார்த்த நாணயம்" இது தன் என்று கூறி, அந்த நாணயத்துக்கு பதிலாக "ஒரு கோடி ரூபாய்" காசோலையை அவன் கையில் கொடுத்தார்.

அவனுக்கு மிகவும் சந்தோசம், அதை விட அதிக ஆச்சர்யம். அந்த பணம் கிடைத்தவுடன் அந்த பெரியவரை காண அந்த பாலம் அருகே ஓடினான், ஆனால் அவர்களை காணவில்லை. அருகே இருந்தவர்களை விசாரித்தபோது , அங்குள்ள ஒரு டீ கடை ஒன்றில் அவர் அவனுக்காக ஒரு கடிதத்தை விட்டு சென்றதாக கூறி அவன் கையில் கொடுத்தார்கள்.

அந்த கடிதத்தில் "நீ உன்னிடம் இருந்த எல்லாவற்றையும் எனக்கென கொடுத்தாய், அதற்கு பதிலாக நான் நீ என்னிடம் கேட்காத ஒரு பெரிய ஆசிர்வாதத்தை உனக்கு கொடுத்துவிட்டேன்; நீ அதை சரியான விதத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்தினால் அதன் மதிப்பை நீ உணர்வாய்." என்று எழுதி இருந்தது.

அந்த செல்லாத பழைய காசு கிடைத்த நேரத்தில் அதை தூக்கி ஏறிய நினைத்தோம், பின்னர் அந்த விளம்பரத்தை பார்த்த பிறகும் போகலாமா வேண்டாமா என்று இருந்தது ஆனால் துணிந்து எடுத்த முயற்சியும், பிறருக்கு உதவும் நல்ல மனமும், எளியவர் ஆனாலும் அவர்கள் கொடுக்க நினைப்பதை (ஞானம், கல்வி, அனுபவம்) ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் நமை இன்று ஒரு கோடீஸ்வரனாக நிறுத்தியதே என்று கடவுளுக்கு நன்றி சொன்னவிதமாய் அங்கிருந்து சென்றான்.

(1இராஜாக்கள் 17:10-16; மத்தேயு 11:28-30)

No comments: