Monday, September 22, 2014

என்னுடைய மகிழ்ச்சி எங்கே????

ஒரு பெரிய ஹாலில் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் உள்ள குடுவையில் போடச் சொன்னார். அதன்பின் அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள்ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டும்  தள்ளிக்கொண்டும் கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 

5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 

'ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்' என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 'இது தான் வாழ்க்கை! எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை!!'


"நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது." 


அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்!!!

Friday, September 12, 2014

பற்றாக்குறை..!!

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நெட்டில் சுட்ட ரொட்டி..!! நன்றாக இருப்பதால் பகிர்கிறேன்.

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
“பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்” என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து “என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?”என்று கேட்டார்.

“ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை பிஸ்கட்பாக்கெட் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது பிஸ்கட்பாக்கெட் யை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்.” என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சரிக்கு சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை!?!