Thursday, November 6, 2014

வங்காரி மாத்தாய்!

ஒரு நாள் ஒரு அடர்ந்தக் காட்டில் காட்டுத் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் செய்வதறியாது தவித்தன.

அவ்வமயம் ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவி மட்டும் எவ்வளவு வேகமாக பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக பறந்து தனது சின்னஞ் சிறு அலகால் தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது.

இதைக் கண்ட பெரிய விலங்குகள் "நீயோ சின்னஞ் சிறு குருவி. உன்னால் என்ன செய்து விட முடியும்?" என்று கேட்டன!

அதற்கு அந்த குருவி "என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத்தான் செய்ய வேண்டும்!!" என்றது.

இந்த கதையைச் சொன்னவர் வங்காரி மாத்தாய்(Wangari Maathai).

அவர் மேலும் "நானும் அந்தச் சிட்டுக் குருவி போல இந்த பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்வேன்.” என்றார்.

அவர் என்ன செய்தார் தெரியுமா?
கிரீன் பெல்ட் மூவ்மென்ட் (Green Belt Movement) என்ற இயக்கத்தை துவங்கி அதன் வாயிலாக கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கியுள்ளார். அதற்காக 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

"வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்."