Monday, November 16, 2009

நியாயத்தீர்ப்பு....


பலகாலங்களுக்கு முன் ஒரு பெரியவர் தன் மகனோடு வாழ்ந்துவந்தார். அவரிடம் காண்போர் யாவரையும் கவரும் வண்ணமாக ஒரு அழகான வெள்ளை குதிரையும் இருந்தது. அவரது நாட்டின் அரசருக்கு அந்த குதிரை மிகவும் பிடிக்கவே, அவர் அந்த பெரியவரிடம் என்ன விலைக்கும் அதை வாங்க தயாராக இருந்தார், ஆனால் அந்த பெரியவரோ அதை தன் மகனைவிட செல்லமாக வளர்ப்பதால் கொடுக்க மறுத்துவிட்டார்.

இது முடிந்தது ஒருவாரம் சென்றநிலையில், ஒருநாள் அந்த குதிரை காணாமல் போனது. அப்போது அந்த ஊர் மக்கள் கூடி "அரசர் கேட்கும்போதே கொடுத்திருந்தால் லாபமாக இருந்திருக்கும், இப்போதோ ஒன்றுமே இல்லாமல் கூடிக்கொண்டு திரும்ப வந்தது" என்று கூறினார்.

அதற்க்கு அவர், "நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள், இதை நியாயம்தீர்ப்பதை விட்டு உங்கள் பணிகளை பாருங்கள்" என்று சாதாரணமாக கூறி சென்றார்.

இருபது நாட்கள் கடந்தன, அவரது அந்த குதிரை காட்டில் இருந்து வேறு ஐந்து குதிரைகளை கூடிக்கொண்டு வந்தது.

அதற்க்கு அந்த ஊர் மக்கள் "நீர் சொன்னது சரிதான் ஐயா, உன் குதிரை ஓடினது நன்மைக்குதான்" என்றனர். அதற்கும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

பின்னர் ஒருநாள் அவரது மகன் அந்த புதிய குதிரை ஒன்றில் சவாரி செய்தபோது
கீழே விழுந்து கால் எலும்பு உடைந்தது. இப்போது அந்த ஊர் மக்கள், "இந்த குதிரைகள் வந்த நேரம் உங்களுக்கு சரி இல்லை, உங்கள் மகனது கால்கள் உடைந்தது பாருங்கள்" என்றனர், அபோதும் அவர் "எல்லாம் நன்மைக்கே" என்று கூறி சென்றார்.

சில தினங்களில் நாட்டில் போர் வரவே, அரசர் வீட்டுக்கு ஒருவர் வருமாறு ஆணை இட்டார். இவரது வீட்டில், இவர் முதியவர்; இவரது மகனும் நடக்க முடியாமல் இருப்பதால் யாரும் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பலர் பிள்ளைகளையும் இழந்தனர்.

எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலையைக் கொண்டோ, உணர்ச்சிவசப்பட்டோ நியாயம் தீர்க்க கூடாது.

Tuesday, November 3, 2009

கண்ணால் காண்பதும் பொய்.

ஒரு நாள் ஒரு பெரியவர், சுமார் இருபது வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் ரயிலில் ஏறினார். அங்கே அவர்களுக்கு ஜன்னல் ஓரமாக இருக்கை கிடைத்தது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வாலிபன் தன் தந்தையிடம்,

"அப்பா மரங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக நகருகிறது;

இந்த இலையில் உள்ளதுதான் பச்சை நிறமா..?;

ரயிலின் புகை வேகமாக பறக்கிறதே..!

ஐயோ மழைத்துளி எவ்வளவு அழகாக இருக்கிறது...!!!"


என்ற ஆசிரிய வார்த்தைகளை அவ்வப்போது கூறிக்கொண்டே வர, தந்தை மட்டும் "ஆமாம், ஆமாம்" என்ற ஒற்றை பதிலை மட்டுமே கூறியவாறு வந்தார்.

இதை கண்ட மாற்ற அனைவரும் மிகவும் ஆத்திரமானார்கள், "என்ன இவன் பயித்தியம் போல பேசுகிறான், அவன் தந்தையும் எல்லாவற்றிற்கும் ஆமாம் போடுகிறார்". இவர்கள் இருவரும் நம்மை முட்டாளாக நினைத்து பேசுகிறார்கள் என ஆத்திரமடைந்து, அந்த தந்தையிடம் வாதிட்டனர்.

அப்போது அந்த தந்தை மிகவும் நிதானமாக, "எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். என் மகன் பிறவியிலேயே பார்வை இழந்தவன். இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து அழைத்து வருகிறேன். அவன் உலகத்தை பார்ப்பது இதுவே முதல்முறை. அதனால் தான் இவ்வளவு ஆச்சர்யமாக எல்லாவற்றையும் ரசிக்கிறான்" என்று கூறவே, அனைவரும் ஊமைகளாயினர்.

நாம் கண்களால் காண்கிற காரியங்களைக்கொண்டு எதையும் உறுதிசெய்ய முடியாது. எதையும் தீர விசாரித்து செயல்படுவது நலம்.