
ஒரு நாள் ஒரு அரசர் உலகை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார். எனவே, தன் அரசவை அதிகாரிகளுடன் அவர் அப்பயணத்தை துவங்கினார். அவ்வாறு செல்கையில் வழியில் ஒரு இடத்தில் ஆயிரகணக்கான மக்கள் வேலை செய்வதை கண்டார். அதில் சிலர் மரங்களில் அழகிய சிற்பங்களையும், சிலர் சிலைகளையும், சிலர் பிரம்மாண்டமான கட்டிடங்களையும் உருவாக்கிகொண்டிருந்தனர். இதை கண்ட அரசருக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. எனவே அவர் தன் சேவகன் ஒருவனை அழைத்து "அங்கே வேலை செய்யும் தட்சனை அழைத்து வா" என்றார். உடனே அந்த தட்சன் அரசரிடம் வந்தார். அவரிடம் அரசர் "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த தட்சர் "இந்த கடுமையான வெயிலில் நான் பெரிய மரங்களை அறுத்து, அதைகொண்டு மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடைய மர சிற்பம் உருவாக்குகிறேன்" என்றார். இவர் கூறிய பதில் மன்னருக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே மீண்டும் அங்குள்ள சிற்பியை அழைத்து கேட்டார். "இவ்வளவு சூடான வெயிலில் கற்பாறைகளை சிறிதாக உடைத்து அதில் தூண், படிகள், சிலைகள் போன்ற கற்சிற்பங்களை உருவாக்குகிறேன் " என்று சிற்பி தன் பதிலை கூறிவிட்டு தன் வேலைக்கு திரும்பினார். அவரை தொடர்ந்து கட்டிட தொழிலாளர் , மேற்பார்வையாளர் என எல்லோரும் தங்கள் பணிகளைப்பற்றி கூறிவிட்டு சென்றனர். ஆனால் இறுதிவரை அங்கு என்ன வேலை நடக்கிறது என்று மன்னருக்கு புலப்படவே இல்லை.இறுதியாக அங்கே கிணற்றில் இருந்து நீரை எடுத்து ஒரு பெரியவர் அங்குள்ள எல்லோருக்கும் குடிக்க கொடுத்து கொண்டு இருந்தார். அதை கண்ட மன்னர், அவரை அழைத்து கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர் "இங்கே உள்ள தட்சர் உலகிலேயே சிறந்த மரசிற்பங்களையும், சிற்பிகள் சிறந்த சிலைகளையும் உருவாக்குகின்றனர். அதனை அந்த கட்டிட தொழிலாளி கட்டிடங்களில் பொறித்து வருகிறார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்து உலகிலேயே பெரிய ஆலயம் ஒன்றை எங்கள் நாட்டு மன்னரின் ஆதரவால் எழுப்புகிறோம் . இவ்வாறு வேலை செய்பவர்கள் தாகம் தீரக்கத்தான் நான் தண்ணீர் வார்துவருகிறேன்" என்று கூறி முடித்தார்.
இதை கேட்ட மன்னர் "உங்களை தவிர இங்குள்ள யாரும் என்ன செய்கிறோம் என்று அறிந்துள்ளனரே தவிர எதற்காக செய்கிறோம் என்று அறியவில்லை" என்று கூறி அந்த பெரியவருக்கு பரிசுகளை வழங்கி சென்றார்.
நாம் செய்யும் வேலையை முழு ஈடுபாடுடனும், எதற்காக செய்கிறோம் என அறிந்தும், அதில் மற்றவர்களின் முக்கிய பங்குகளை உணர்ந்தும் செயல்படுவது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment